விவசாய நிலங்களுக்கு வழிமறித்து தனியார் சோலார் நிறுவனம் அராஜகம்: 1,500 பனை மரங்கள் வெட்டி அழிப்பு - பரதராமி மக்கள் போராட்டம்

இராணிப்பேட்டை மாவட்டம் திமிரி - கலவை நெடுஞ்சாலையில் உள்ள தனியார் சோலார் பிளான்ட் நிறுவனம் முன்பாக, பரதராமி, மோசூர் மற்றும் கனியனூர் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாய பொதுமக்கள் திரண்டு திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 தனியார் சோலார் பிளான்ட் நிறுவனம் விவசாய மக்களுக்கு தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும்  நிலங்களுக்குச் செல்வதற்கான பொதுப்பாதையை வழங்காமல், சுற்றிலும் வேலி அமைத்து தங்களை அச்சுறுத்தி வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். உடனடியாக தங்களது விவசாய நிலங்களுக்குச் செல்ல நிரந்தர வழிவிட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையை முன்வைத்து, கோஷங்களை எழுப்பியவாறு அவர்கள் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

 மோசூர், பரதராமி மற்றும் கனியனூர் ஆகிய கிராம எல்லைகளுக்குட்பட்ட பகுதியில், சோலார் நிறுவனத்திற்கு இடையில் சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் நீர்நிலைகள் மற்றும் இதர அரசுப் புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அரசு நிலங்களைத் தசரதன் என்கிற கிராம நிர்வாக அலுவலர் (VAO), விதிமுறைகளை மீறி அந்த தனியார் சோலார் நிறுவனத்திற்குச் சட்டவிரோதமாகப் பட்டா போட்டுத் தந்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் பகிரங்கமான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

மேலும், அந்த அரசுப் புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக வளர்ந்து நின்ற சுமார் 1,500 பனை மரங்களைச் சோலார் நிறுவனம் முற்றிலும் வெட்டி, தீயிட்டுக் கொளுத்தி அழித்துள்ளதாகவும், இதற்குப் பின்னால் வருவாய்த்துறையினரின் மிகப்பெரிய சதி ஒளிந்திருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 வருவாய்த்துறையினர் இந்த தனியார் நிறுவனத்திற்கு முழு உடந்தையாக இருந்து, பெரும் தொகையைக் கையூட்டாகப் பெற்றுக்கொண்டு சோலார் பிளான்ட் நிறுவனம் இந்த அநீதியில் ஈடுபடத் துணையாக இருந்துள்ளனர் என்றும் கிராம மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நெடுஞ்சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதை அடுத்து, 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திமிரி போலீசார் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதிகாரிகளின் உறுதியை ஏற்றுப் பொதுமக்கள் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றபோதிலும், தங்களது நியாயமான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், வருவாய்த்துறை மற்றும் சோலார் நிறுவனத்தைக் கண்டித்து மீண்டும் ஒரு மிகப்பெரிய தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக எச்சரித்துள்ளனர்.
Previous Post Next Post