ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சியில், மக்கள் பிரதிநிதியே அரசு அனுமதியின்றி சட்டவிரோதமாக நிலத்தடி நீரைச் சுரண்டி, வணிக ரீதியாக விற்பனை செய்து வரும் அதிர்ச்சிப் தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறைகேட்டிற்கு பேரூராட்சி அதிகாரிகளும், முக்கிய அரசியல் புள்ளிகளும் உடந்தையாக இருப்பதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமிரி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினராகப் பதவி வகித்து வருபவர் ராமு. இவருக்கு விளாரி கிராமத்திற்குச் செல்லும் சாலையில், ஆர்.கே. ரைஸ் மில்லுக்கு எதிரே சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ரயில்வே திட்டத்திற்காக இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. எனினும், திட்டப் பணிகள் இன்னும் தொடங்கப்படாததால், ராமு தொடர்ந்து அந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், விவசாயத்திற்காக வழங்கப்பட்ட மின் இணைப்பு மற்றும் கிணற்றுத் தண்ணீரைத் தவறாகப் பயன்படுத்தி, கடந்த இரண்டு வருடங்களாக ராமு கள்ளத்தனமாகத் தண்ணீர் வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விவசாய நிலத்தில் கான்கிரீட் கட்டிடம் ஒன்றை அமைத்து, அதில் முறையான அனுமதியின்றி 'ஆர்.ஓ' (RO) சுத்திகரிப்பு நிலையம் அமைத்துள்ளார்.
நிலத்தடி நீர் பரிசோதனை சான்றோ அல்லது பேரூராட்சியின் எவ்வித வணிக அனுமதியோ இன்றி, தினமும் காலை 5 மணி முதல் 8 மணி வரை லாரிகள் மூலம் நூற்றுக்கணக்கான கேன்களில் தண்ணீர் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கேன் தண்ணீர் 15 முதல் 20 ரூபாய் வரை விற்கப்பட்டு, தினமும் பல்லாயிரக்கணக்கில் வருவாய் ஈட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
மக்கள் பிரதிநிதியான வார்டு உறுப்பினரின் இந்த விதிமீறலுக்குப் பின்னால் பேரூராட்சியின் முக்கியப் புள்ளிகள் இருப்பதாகக் கடுமையான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பேரூராட்சி செயலாளர் சரவணன்
பேரூராட்சி நகர தலைவர் மாலா இளஞ்செழியன்
பாஸ்கர் அதிமுக நகர செயலாளர் பாஸ்கர் ஆகியோர்
இந்த சட்டவிரோத தண்ணீர் விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்தில், மேற்கண்ட அதிகாரிகளுக்கும் அரசியல் பிரமுகர்களுக்கும் முறையான 'கமிஷன்' கைமாறுவதாலேயே, இந்த விவகாரத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் மௌனம் சாதித்து வருவதாகச் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களுக்காகச் சேவை செய்ய வேண்டிய நகரமன்ற உறுப்பினரும், தலைவரும், அரசு அதிகாரிகளும் இணைந்து நிலத்தடி நீரைச் சுரண்டும் இச்செயல் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, நேர்முக விசாரணை நடத்தி, சட்டவிரோத தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்றும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட வார்டு உறுப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.