திமிரி புதிய பேருந்து நிலைய கழிப்பறையில் கூடுதல் கட்டணக் கொள்ளை: ஒப்பந்ததாரர் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு!



ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பேரூராட்சியில் புதிதாகத் திறக்கப்பட்ட பேருந்து நிலைய கழிப்பறையில், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட பல மடங்கு கூடுதலாகப் பணம் வசூலிப்பதாக ஒப்பந்ததாரர் மீது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளனர்.

திமிரி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்  நவீன வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது.  
பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்த இந்த நவீன பேருந்து நிலையத்தில், பயணிகளின் வசதிக்காகக் கழிப்பறை கட்டடமும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கழிப்பறையைப் பராமரிக்கும் ஒப்பந்ததாரர், அரசு நிர்ணயித்த கட்டண முறைகளைப் பின்பற்றுவதில்லை என்று கூறப்படுகிறது.
அரசு விதிகளின்படி மிகக் குறைந்த கட்டணமே வசூலிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், இங்கு சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதற்கு 10 ரூபாயும், குளிப்பதற்குப் பொதுமக்களிடம் இருந்து 30 ரூபாயும் கட்டாயப்படுத்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், இலவசமாகப் பயன்படுத்த வேண்டிய கழிப்பிடப் பிரிவிற்கும் முறைகேடாகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

சாமானிய மற்றும் ஏழை எளிய மக்கள் தினமும் வந்து செல்லும் இந்த பேருந்து நிலையத்தில், பகல் கொள்ளையில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர் மீது அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டவிரோத கூடுதல் கட்டண வசூலில் உள்ளூர் அரசு அதிகாரிகள் சிலருக்கும் பங்கு செல்வதாகச் சமூக ஆர்வலர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் உடனடியாகத் தலையிட வேண்டும். ஏழை எளிய மக்களைப் பாதிக்கும் இந்தக் கூடுதல் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தி, அரசு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post