விவசாய நிலத்தில் விதிமீறலாக RO பிளான்ட் திமிரி பேரூராட்சி வார்டு உறுப்பினர் மீது குற்றச்சாட்டு, விளாரி VAO, EB உதவி மின் பொறியாளர் உடந்தை!


ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி பேரூராட்சி, மக்கள் பிரதிநிதி ஒருவர் அரசு அனுமதியின்றி விவசாய நிலத்தில் RO குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து, நிலத்தடி நீரை வணிக ரீதியாக பயன்படுத்தி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

ராமு  & லோகேஸ்வரன் 

விவசாய நிலத்தில் RO பிளான்ட்

திமிரி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினர் லோவகேஸ்வரி ராமு என்பவருக்கு, விளாரி கிராம ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் ஆர்.கே. ரைஸ் மில்லுக்கு எதிரே சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலம் சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் ரயில்வே திட்டத்திற்காக கையகப்படுத்தப்பட்டதாகவும், திட்டப்பணிகள் இன்னும் தொடங்காத நிலையில் தொடர்ந்து விவசாயம் செய்யப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

மின் இணைப்பு மற்றும் கிணற்று நீர் விவசாய பயன்பாட்டிற்கா? வணிக பயன்பாட்டிற்கா?

இந்நிலையில், விவசாயத்திற்காக வழங்கப்பட்ட இலவச மின் இணைப்பு மற்றும் கிணற்று நீரை சட்டவிரோதமாகப் பயன்படுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக வணிக ரீதியில் குடிநீர் விற்பனை நடைபெற்று வருவதாகப் புகார் எழுந்துள்ளது. விவசாய நிலத்தில் கான்கிரீட் கட்டிடம் அமைத்து, முறையான அனுமதிகள் இன்றி இந்த RO சுத்திகரிப்பு நிலையம் தன்னிச்சையாக இயக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 அதிகாரிகள் உடந்தை


நிலத்தடி நீர் பரிசோதனை சான்றிதழ் மற்றும் எவ்வித வணிக அனுமதியும் இல்லாமல், தினமும் அதிகாலை 5 மணி முதல் 8 மணி வரை லாரிகள் மற்றும் வாகனங்கள் மூலம் நூற்றுக்கணக்கான கேன்களில் தண்ணீர் எடுத்துச் சென்று விற்பனை செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஒரு கேன் 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு, தினமும் பல்லாயிரக்கணக்கில் வருமானம் ஈட்டப்பட்டு வருவதாகத் தெரிகிறது.

இந்த விதிமீறல் விவகாரத்தில், விளாரி பகுதி கிராம நிர்வாக அலுவலர் (VAO) மற்றும் அப்பகுதி மின்வாரிய உதவி பொறியாளர் (JE) ஆகியோர் உரிய நடவடிக்கை எடுக்காமல், உடந்தையாக இருந்து அனுமதி வழங்கியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

வாடும் பயிர்கள்

தற்போது அந்த நிலத்தில் பயிர்கள் பயிரிடப்பட்டிருந்தும், போதிய தண்ணீர் பாய்ச்சப்படாததால் பயிர்கள் வாடி வருவதாகவும், விவசாயத் தேவையை விட குடிநீர் விற்பனைக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் இதனால் அருகாமையில் உள்ள விவசாயக் கிணறுகள் தண்ணீர் வற்றி வருவதாகவும் உள்ளூர் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

 மாவட்ட ஆட்சியர் தலையிட கோரிக்கை

மக்கள் பிரதிநிதியாக இருக்கும் வார்டு உறுப்பினர் மற்றும் அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள் மீது ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பிரியா உடனடியாக தலையிட்டு நேரடி விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். விதிமீறல் உறுதி செய்யப்பட்டால், சட்டவிரோத குடிநீர் நிலையத்திற்கு சீல் வைத்து, தொடர்புடையவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Previous Post Next Post