தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையில் உள்ள விவசாய சங்க மண்டபத்தில், தென் மண்டல வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பாக முப்பெரும் விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் 2025–2026ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் படித்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ-மாணவிகளுக்குப் பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்பட்டன.
சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்துகொண்ட பெரியகுளம் வட்டாட்சியர் மருதுபாண்டி மற்றும் தேனி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் சிதம்பர சூரிய வேலு ஆகியோர் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்குப் பொன்னாடை போர்த்தி, நினைவுப் பரிசுகள் மற்றும் ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய் வழங்கி கௌரவித்தனர்.
இதில் 12-ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்ற கீர்த்தி, தாரணி ஸ்ரீ, பிரியதர்ஷினி ஆகிய மாணவிகள் முதலிடங்களைப் பிடித்துப் பரிசு பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து 10-ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்ற சாம்பவி, ஹர்ஷிணி கோபிகா, வைஷ்ணவி ஆகிய மாணவிகளும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர் விஜய்யும் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.
மேலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் விதமாகவும், உயர்கல்வி வழிகாட்டியாகவும் விளங்கும் "என்ன படிக்கலாம்?" என்ற சிறப்புப் புத்தகம் இவ்விழாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் கருப்பையா, அறங்காவலர் முத்தையா, இணை நிர்வாக அறங்காவலர் குமரன், நிர்வாக பொருளாளர் பாலமுருகன், அறங்காவலர் பிச்சையம்மாள் ஆறுமுகம் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.