வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு 10 நாட்களுக்குப் பின் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை.!


*நீர்த்தேக்க பகுதியில் உரை கிணறுகளை சுற்றி வளர்ந்திருந்த ஆகாயத்தாமரை செடிகள் அகற்றி சுத்தம் செய்யும் பணி தீவிரம் இரு தினங்களில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும் என பேரூராட்சி தலைவர் உறுதி.!!*

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணை, போதுமான நீர்வரத்து இல்லாத காரணத்தினாலும், போதிய மழை பெய்யாத காரணத்தினாலும் நீர்மட்டம் 20 அடியாக சரிந்தது. இதனைத் தொடர்ந்து வைகை அணையில் இருந்து செயல்படுத்தப்படும் அனைத்து கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கும் குடிநீர் வினியோகம் அடியோடு நிறுத்தப்பட்டது. 

இந்த நிலையில் தென்மேற்கு பருவ மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்த நிலையில் அங்கிருந்து வைகை அணைக்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது.  இந்த தண்ணீர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வைகை அணையை வந்து சேர்ந்தது. 

இதனைத் தொடர்ந்து வைகை அணையின் நீர்மட்டம் 20 அடியில் இருந்து 23 அடியாக அதிகரித்தது. இதையடுத்து வைகை அணையில் இருந்து செயல்படுத்தும் அனைத்து குடிநீர் திட்டங்களுக்கும் 50% குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் வைகை அணையில் இருந்து ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு கடந்த 10 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாத நிலையில் தற்போது குடிநீர் விநியோகம் செய்யும் பணியை பேரூராட்சி அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக வைகை அணையின் நீர்த்தேக்க பகுதியில் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு குடிநீர் வழங்கும் உரை கிணற்றை சுற்றி பறந்து விரிந்து வளர்ந்திருந்த ஆகாயத்தாமரைச்செடிகள் புண்டோசர் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. மேலும் இனிவரும் காலங்களில் உரைக்கிணறு சுற்றிலும் ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்வதை தடுக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டது.

 இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த உடன் இன்னும் இரு தினங்களில் ஆண்டிப்பட்டி பேரூராட்சிக்கு சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என பேரூராட்சி தலைவர் சந்திரகலா தெரிவித்துள்ளார்......
Previous Post Next Post