தேனி மாவட்டம் பெரியகுளத்தில் புதிய பேருந்து நிலைய பிரிவில் பயணிகளின் நலனுக்காக அமைக்கப்பட்டிருந்த நிழற்குடை, சில காலத்திற்கு முன்பு இடிக்கப்பட்டது. அங்கு புதிய நிழற்குடை கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில், தற்போது அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து பூக்கடை அமைத்துள்ளனர்.
இதனால், பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் கடுமையான வெயிலில் திறந்தவெளியில் நிற்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, பயணிகள் அங்கு நிழலுக்காக நிற்கும்போது, கடைக்காரர்கள் "கடைக்கு முன்பு நிற்கக் கூடாது" என்று கூறி, தரையில் தண்ணீரை ஊற்றி பயணிகளுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தி வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த அவல நிலை மாற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, இந்த அரசு நில ஆக்கிரமிப்பை அதிரடியாக அகற்ற வேண்டும் என்றும், பயணிகள் தாராளமாக நின்று பேருந்து ஏறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐயங்கரன் அவர்கள் இதில் தனிக்கவனம் செலுத்தி, துறை சார்ந்த அதிகாரிகள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு இந்த இடத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவாரா என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.