ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த தாழனூர் கிராமத்தில், ஊர் நாட்டான்மைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் கோவில் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது.
விழா அன்று காலை, ஏரிக்கரையிலுள்ள பொன்னியம்மன் மற்றும் செல்லி அம்மனுக்குப் பெண்கள் பொங்கலிட்டு தங்களது வழிபாட்டைத் தொடங்கினர். அம்மனுக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
மதியம் 3 மணியளவில், ஏரிக்கரை அருகிலுள்ள கோவிலிலிருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா புறப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பக்தர்கள் தங்கள் உடலில் எலுமிச்சை பழம் குத்திக் கொண்டும், தாடையில் வேல் அணிந்தும் பக்தி பரவசத்துடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சில பக்தர்கள் அந்தரத்தில் தொங்கியவாறு வாகனத்தில் ஊர்வலமாகச் சென்று கிராமத்தின் பள்ளி மைதானத்தை வந்தடைந்தனர்.
பள்ளி மைதானத்தில் நிறுத்தப்பட்ட அம்மன் சிலைக்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது வானத்தில் பறந்து வந்து அம்மனுக்கு மாலை போடும் கண்கவர் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழக அமைச்சர் ஆர். காந்தியின் மகன் வினோத் காந்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தார்.
தொடர்ந்து இரவு 8 மணியளவில் தாரை தப்பட்டை முழங்க, கரகாட்டம் மற்றும் வண்ணமயமான வானவேடிக்கைகள் நடைபெற்றன. இந்த விழாவில் தாழனூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் அருள் பெற்றனர்.