முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்புப் பகுதியில் மழை வேண்டி மும்மதப் பிரார்த்தனை.!

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைகளுக்கு முதன்மையான நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை ஆகும். இந்த அணையின் நீரை நம்பியே இப்பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக, தேனி மாவட்டத்தில் உள்ள 14,707 ஏக்கர் இருபோக சாகுபடி நிலங்கள் முல்லைப் பெரியாறு அணை நீரையே முழுமையாகச் சார்ந்துள்ளன.

இப்பகுதிகளின் முதல் போக விவசாயத்திற்காக ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி தமிழகப் பகுதிக்குத் தண்ணீர் திறந்து விடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், போதிய நீர் இருப்பு இல்லாததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்க வேண்டிய தென்மேற்குப் பருவமழை பொய்த்துப் போனதால், முதல் போகச் சாகுபடிக்குப் போதிய தண்ணீர் திறக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால், அணையின் நீர்மட்டமும் தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 112.90 அடியாக உள்ளது.
இந்நிலையில், அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்யவும், விவசாயத்திற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவும் வேண்டி, 

ஐந்து மாவட்ட விவசாயச் சங்கம் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயிகள் இணைந்து மும்மதப் பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

கேரள மாநிலம் தேக்கடியில் உள்ள தமிழகப் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் இருக்கும் ஜெயதுர்க்கை அம்மன் கோயிலில், மழை வேண்டி வருண பகவானுக்குச் சிறப்பு யாகப் பூஜை நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, யாகம் வளர்க்கப்பட்ட புனித நீரினைத் தமிழகப் பகுதிக்குத் தண்ணீர் திறந்துவிடும் ஷட்டர் பகுதிக்குக் கொண்டு சென்றனர். அங்கு இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் முறைப்படி பூஜைகள் செய்தனர். 

அதேபோல், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதக் குருமார்களும், விவசாயிகளும் அங்கு கூடி மழை வேண்டி அவரவர் மத வழக்கப்படி சிறப்பான பிரார்த்தனைகளை மேற்கொண்டனர். 

இறுதியாகப் பூஜிக்கப்பட்ட புனித நீர், பெரியாற்று நீரில் கலக்கப்பட்டது.
மழை வேண்டி நடத்தப்பட்ட இந்த நல்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயச் சங்கப் பிரதிநிதிகள், மும்மதக் குருமார்கள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.....
Previous Post Next Post