திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான அனைத்து துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம் மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தை தொடர்ந்து திருவாரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அமைச்சர் விஸ்வநாதனுக்கு திருவாரூரில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் விஸ்வாதன் காங்கிரஸ் கட்சியினர் மத்தியில் பேசுகையில், திருவாரூர் மாவட்டத்திற்கு முதல்வர் ஜோசப் விஜய் என்னை பொறுப்பு அமைச்சராக நியமித்தார். நான் அவரிடம் ஏன் என்னை பொறுப்பு அமைச்சராக திருவாரூர் மாவட்டத்திற்கு நியமித்தீர்கள் என கேட்டபோது அதற்கு முதல்வர் விஜய் டெல்டா மாவட்டங்கள் என அழைக்கப்படும் திருவாரூர், தஞ்சை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை என இம்மாவட்டங்களில் ஏறத்தாழ 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இத்தகைய 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரு பொறுப்பான, படித்த அமைச்சர் வேண்டும் என்பதால் என்னை முதல்வர் ஜோசப் விஜய் நியமித்ததாக தெரிவித்தார்.
கூட்டணி தர்மத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர் பதவியை கொடுத்த எங்கள் முதல்வர் விஜயை அவமதிக்கும் வகையில் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு இருப்பதாகவும், ஏற்கனவே டெல்டா மாவட்டத்தில் ஒன்றான தஞ்சை மாவட்டம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியின் தவெக உறுப்பினர் வினோத் வேளாண்துறை அமைச்சராக இருந்து வரும் நிலையில், முதல்வர் ஜோசப்விஜய் டெல்டா மாவட்டங்களுக்கே பொறுப்பு அமைச்சராக தன்னை நியமித்துள்ளதாக தவறான கருத்தை முன்வைத்த அமைச்சர் விஸ்வநாதன், முதல்வர் ஜோசப்விஜய் தலைமையிலான மந்திரி சபையில் பொறுப்பான, படித்த அமைச்சரே இல்லை என்ற ஒரே எண்ணத்தில், தமிழக வெற்றிக்கழகத்தை அவமதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதனின் பேச்சு அமைந்துள்ளதாக அமைச்சரின் பேச்சை மேற்கோள்காட்டியும், முதல்வர் விஜய் காங்கிரஸ் கட்சிக்கு தக்கபதிலடி கொடுக்கவேண்டும் என தவெகவினர் சமூகவலைதளங்கள் மூலமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.