ராணிப்பேட்டை, ஜூலை 29:
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், பத்மாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவிலை புனரமைத்து, மீண்டும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து மக்கள் கட்சி சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
வேலூர் கோட்டத் தலைவர் எஸ்.கே. மோகன் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், இந்து மக்கள் கட்சியின் தமிழக நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் சமூக ஊடகப் பிரிவு மாநிலத் தலைவர் ஜெ. கண்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், சோளிங்கர் வட்டம் பத்மாபுரம் கிராமத்தில் புல எண் 24/1-ல் அமைந்துள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்மசுவாமி திருக்கோவில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சுவாமிக்கு பூஜை, புனஸ்காரங்கள் நடைபெற்று வந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கோவில் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது கோவில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதுடன், கோவில் நிலத்தை சிலர் ஆக்கிரமிக்க முயற்சிப்பதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனவே, மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு மேற்கொண்டு கோவிலை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவும், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கவும், மேலும் கோவிலுக்கு புதிய அறங்காவலர் குழுவை அமைத்து, உள்ளூர் முக்கியஸ்தர்களை நியமித்து தினசரி பூஜைகள் மற்றும் வழிபாடுகளை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்கவும் கோரப்பட்டுள்ளது.
மேலும், சிதிலமடைந்த கோவிலின் புகைப்படங்களும் மனுவுடன் இணைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த மனு, இந்து மக்கள் கட்சி மற்றும் பத்மாபுரம் கிராம மக்களின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது.