​ஆற்காடு அருகே ஓடும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுநர், நடத்துனர் துரித செயல்பாட்டால் 56 பயணிகள் உயிர் தப்பினர்

​ஆற்காடு:

ஆற்காடு அருகே அரசு நகரப் பேருந்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், ஓட்டுநர் மற்றும் நடத்துனரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் 56 பயணிகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

ஆற்காட்டிலிருந்து இசையனூர் கிராமத்திற்கு தடம் எண் 37 கொண்ட அரசு பேருந்து  இயக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 8:30 மணியளவில் ஆற்காட்டிலிருந்து இசையனூர் சென்று மீண்டும் ஆற்காடு நோக்கி வந்து கொண்டிருந்தது.

​ சக்கரமல்லூர்  அண்ணா நகர் பகுதி அருகே பேருந்து வந்தபோது, எதிர்பாராத விதமாக பேருந்தின் உட்புறத்தில் மின்கசிவு ஏற்பட்டது. இதனால் பேருந்திலிருந்து கரும்புகை வெளியேறி திடீரென தீப்பற்றத் தொடங்கியது.

இதனை கவனித்த ஓட்டுநர்  சுந்தர்ராஜ் (45) மற்றும் நடத்துனர் என். ரவிச்சந்திரன் (59) ஆகியோர் உடனடியாகப் பேருந்தை நிறுத்தி, உள்ளே இருந்த 56 பயணிகளையும் விரைவாகக் கீழே இறங்குமாறு எச்சரித்தனர். பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறங்கிய சில நிமிடங்களிலேயே தீ பேருந்து முழுவதும் மளமளவெனப் பரவியது. இதனால் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.

சம்பவம் குறித்து ராணிப்பேட்டை தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடித் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

​இது குறித்து ஆற்காடு கிராமிய காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்கசிவு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓடும் பேருந்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Previous Post Next Post