திருச்சி மாவட்டம் மருங்காபுரி வட்டாரத்தில் உள்ள அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் (குடுமியான்மலை, புதுக்கோட்டை) சார்பில் ஒரு விரிவான வேளாண் கண்காட்சி சமீபத்தில் நடத்தப்பட்டது. இக்கண்காட்சியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இந்த கண்காட்சியின் முக்கிய நோக்கம், மரபு நெல் வகைகள், பச்சை உரப் பயிர்கள், உயிர் உரங்கள் (Bio fertilizers) மற்றும் இயற்கை உரங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஏற்படுத்துவதாகும். கண்காட்சியில் பல்வேறு பாரம்பரிய நெல் வகைகள், அவற்றின் சிறப்பம்சங்கள், விளைச்சல் திறன் மற்றும் காலநிலை ஏற்றத்தன்மை குறித்து விளக்கப் பலகைகளுடன் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
மேலும், மண்ணின் வளத்தை மேம்படுத்தும் பச்சை உரப் பயிர்கள், பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் உயிர் உரங்கள், மற்றும் இயற்கை முறையில் தயாரிக்கப்படும் மாட்டுசாணம், வெர்மிகம்போஸ்ட், பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம் போன்ற இயற்கை உரங்கள் பற்றிய செய்முறை விளக்கங்களும் வழங்கப்பட்டன.
கண்காட்சிக்கு வந்த விவசாயிகள், இவ்வகை இயற்கை மற்றும் பாரம்பரிய முறைகள் மூலம் செலவு குறைந்து, மண் வளம் அதிகரித்து, நீடித்த விவசாயம் மேற்கொள்ள முடியும் என்பதை அறிந்து மகிழ்ச்சி தெரிவித்தனர். பள்ளி மாணவர்களும் விவசாயம் குறித்த அடிப்படை அறிவைப் பெறுவதோடு, இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சி மூலம், இளம் தலைமுறையினரிடையே விவசாயம் குறித்த ஆர்வம் அதிகரிப்பதோடு, பாரம்பரிய விதைகள் மற்றும் இயற்கை விவசாய முறைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதற்கான நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.
