ஆற்காடு வட்டம், ராணிப்பேட்டை மாவட்டத்திற்குட்பட்ட சக்கரமல்லூர் கிராமத்தில் புதிதாக கிராம நிர்வாக அலுவலராக பணியில் சேர்ந்த வெங்கடேண் தற்போது வேறு இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த ஊர் பொதுமக்கள், கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது, வெங்கடேண் கடந்த காலத்தில் சக்கரமல்லூர் கிராமத்தில் பணியாற்றிய போது எந்தவித லஞ்சம் இன்றியும் பொதுமக்கள் நலனுக்காக செயல்பட்டு பல்வேறு பணிகளை செய்துள்ளார். ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத் தருதல், நீண்ட காலமாக பெயர் பதிவு இல்லாமல் இருந்த பட்டா தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு காணுதல் உள்ளிட்ட பணிகளில் முக்கிய பங்காற்றியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் அவர் மீண்டும் சக்கரமல்லூர் கிராமத்தில் பணியமர்த்தப்பட்ட செய்தி அறிந்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், தற்போது அவரை மாற்றியுள்ளதாக தெரிந்ததும் பொதுமக்கள் மனவேதனை அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி வெங்கடேண் மீண்டும் சக்கரமல்லூர் கிராமத்திற்கே கிராம நிர்வாக அலுவலராக பணியமர்த்த வேண்டும் என பொதுமக்கள் ராணிப்பேட்டை கோட்டாட்சியரிடம் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளனர்