டி.எல்.ஆர் கலைக் கல்லூரியில் பொங்கல் விழா – கல்வி வளர்ச்சி குறித்து எஸ்.எம். சுகுமார் சிறப்புரை


ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த டி.எல்.ஆர் கலைக் கல்லூரியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று பொங்கல் விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ரவி மற்றும் தாளாளர் கோமதி ரவி ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் முனைவர் கௌதமன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். உதவி ஆசிரியர் திவ்யபாரதி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். புல முதன்மையர் பா. நிர்மலா வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அதிமுக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் எஸ். எம். சுகுமார் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், பொங்கல் திருநாள் உழைப்பின் மகத்துவத்தையும், தமிழர் பண்பாட்டின் அடையாளமாக விளங்கும் திருநாள் என எடுத்துரைத்தார்.

மேலும் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கல்வித் துறைக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகக் கூறினார். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியைத் தொடரும் வகையில் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன என்றும், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்ட திட்டம் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த  உதவியதாக தெரிவித்தார்.

கிராமப்புற மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வாழும் மாணவர்கள் உயர்கல்வியை எளிதில் அடைய வேண்டும் என்பதற்காக புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன என்றும், இதன் மூலம் மாணவர்கள் தொலைதூரம் சென்று படிக்கும் சிரமம் குறைந்தது என சுட்டிக்காட்டினார். மேலும் தொழில்நுட்பக் கல்வி, தொழில் வாய்ப்பு சார்ந்த பாடப்பிரிவுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் மாணவர்கள் வேலைவாய்ப்புக்கு தயாரானதாக உருவாகினர் என்றும் தெரிவித்தார்.

கல்வியே ஒரு சமூகத்தின் வளர்ச்சிக்கான அடித்தளம் என்பதால், மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்தி ஒழுக்கம், கடின உழைப்பு, இலக்கை நோக்கிய முயற்சி ஆகியவற்றுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என அறிவுரை வழங்கினார். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டுதலை மதித்து, நாட்டுக்கும் சமூகத்துக்கும் பயனுள்ள நல்ல குடிமக்களாக உருவாக வேண்டும் என வாழ்த்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் துறை தலைவர் யோகலட்சுமி நன்றி உரையாற்றினார்.
Previous Post Next Post