, திமிரி ஜன._
ராணிப்பேட்டை மாவட்டம், திமிரி பேரூராட்சிக்கு உட்பட்ட குசேல தெருவில் உடைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய், அப்பகுதியில் வசிக்கும் ஏழை குடும்பத்தின் வாழ்வையே கேள்விக்குறியாக்கியுள்ளது. பல மாதங்களாக தொடரும் இந்த அவல நிலை காரணமாக, அந்த குடும்பம் தினந்தோறும் உயிர் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக வேதனையுடன் தெரிவித்துள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் லில்லி என்பவர், செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க அளித்த பேட்டியில்,
நோய்வாய்ப்பட்ட கணவர் மற்றும் இரண்டு ஆண் பிள்ளைகளுடன் சிதிலமடைந்த வீட்டில் வசித்து வருவதாகவும், வீட்டின் அருகே உடைந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாய் தங்களது அன்றாட வாழ்க்கையை முற்றிலும் முடக்கி விட்டதாகவும் தெரிவித்தார்.
கழிவுநீர் தேங்கியதால் கடும் துர்நாற்றம் நிலவி வருவதுடன், மழைக் காலங்களில் வீட்டிற்குள் வெள்ளநீர் புகுந்து, அதனுடன் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வருவதால், இரவு முழுவதும் தூக்கமின்றி உயிருக்கு அஞ்சி தவிப்பதாக கூறினார். பிள்ளைகளை பாதுகாப்பு குறித்து நாள்தோறும் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக திமிரி பேரூராட்சி அதிகாரிகளிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் பலமுறை மனு அளித்த போதும், “விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்ற வெற்று வாக்குறுதிகள் மட்டுமே கிடைத்ததாகவும், இதுவரை எந்தச் செயல்பாட்டு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
பண பலமோ, அரசியல் பின்புலமோ இல்லாத காரணத்தால், எங்களைப் போன்ற ஏழைகளின் குரல் புறக்கணிக்கப்படுகிறதோ? என்ற சந்தேகம் எழுவதாகவும், அதிகாரிகள் இனியாவது இந்த அவல நிலையை உணர்ந்து, உடைந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாகச் சீரமைத்து, எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என உருக்கமாகக் கோரிக்கை விடுத்தார்.
சம்பவம் குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா என அப்பகுதி குடியிருப்பு பொதுமக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.