உடல் ஆரோக்கிய விழிப்புணர்வுக்காக ராணிப்பேட்டையில் மாரத்தான் – வாகத்தான் நடை பயணம்; 1300 பேர் பங்கேற்பு


ராணிப்பேட்டை மாவட்டம்
உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் போதைப் பொருட்களை அடியோடு ஒழிப்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், திருமலை மிஷன் அறக்கட்டளை மற்றும் வேதவல்லி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளிகள் சார்பில் 6.3 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் மற்றும் 6 கிலோ மீட்டர் வாகத்தான் நடை பயணம் இன்று நடைபெற்றது.
ராணிப்பேட்டையில் உள்ள வேதவல்லி வித்யாலயா சிபிஎஸ்சி பள்ளி வளாகத்திலிருந்து தொடங்கிய மாரத்தான் ஓட்டம் மற்றும் வாகத்தான் நடை பயணத்தை, சி.எம்.சி. மருத்துவமனை மனநலத் துறை தலைமை மருத்துவர் டாக்டர் தீபா ராமசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் மாரத்தான் ஓட்டத்தில் 900 பேரும், வாகத்தான் நடை பயணத்தில் 400 பேரும் பங்கேற்றனர். மொத்தமாக 1300 பேர் உற்சாகமாக கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நகரின் முக்கிய பகுதிகள் வழியாக சென்ற மாரத்தான் ஓட்டமும் நடை பயணமும், இறுதியில் இந்திரா தொழிற்சாலை அருகே அமைந்துள்ள பள்ளி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்தது.
அங்கு நடைபெற்ற பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு திருமலை மிஷன் டிரஸ்ட் இயக்குனர் பூமா பார்த்தசாரதி தலைமை வகித்தார். தலைமை செயல் அலுவலர் ஆனந்த் ரங்கஆச்சாரி மற்றும் பள்ளி தாளாளர் வித்யா சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் குணசேகரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாரத்தான் மற்றும் வாகத்தான் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
1994 ஆம் ஆண்டு அக்ஷயா வித்யா அறக்கட்டளை மூலம் தொடங்கப்பட்ட வேதவல்லி வித்யாலயா பள்ளி, மாணவர்களுக்கு பொது அறிவு, வரலாற்று விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு சமூக செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. ‘என் நகரம் – என் பெருமை’ என்ற தலைப்பில் வரலாற்று இடங்கள் பார்வையிடல், ‘என் நகரம் பசுமை நகரம்’ என்ற கருத்தின் அடிப்படையில் மரக்கன்றுகள் நடுதல், விதை பந்து தயாரித்தல் போன்ற பணிகளை மாணவர்கள் முன்னதாக மேற்கொண்டுள்ளனர்.
இதன் சகோதர நிறுவனமான திருமலை மிஷன் அறக்கட்டளை, மருத்துவ சேவைகள், பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள், போதைப்பழக்கத்தில் இருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டெடுக்கும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை செய்து வருகிறது. தற்போது உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்த இரு நிறுவனங்களின் சார்பில் இந்த மாரத்தான் மற்றும் நடை பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் கடந்த 33 ஆண்டுகளாக போதை ஒழிப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் டாக்டர் கபிலனை, திருமலை மிஷன் டிரஸ்ட் இயக்குனர் பூமா பார்த்தசாரதி பொன்னாடை அணிவித்து சிறப்பு விருது வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி இயக்குனர் அனந்தராமன், துணை இயக்குனர் நிர்மலா, ராணிப்பேட்டை காவல் ஆய்வாளர் சசிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பானு நன்றி தெரிவித்தார்.
Previous Post Next Post