திருத்துறைப்பூண்டி - சென்னை தேசிய நெடுஞ்சாலையானது, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை வழியாக செல்லும் மிக முக்கிய மாநில நெடுஞ்சாலை. பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த சாலையில் சேந்தமங்கலம் இ.பி.காலனி பகுதியில் சாலை மிகவும் மோசமாக பழுதடைந்து வாகனங்கள் இயக்க முடியாத அளவிற்கு சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்க வலியுறுத்தி பலமுறை திருவாரூர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மாலை பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய பெண்மணி ஒருவர் சேந்தமங்கலம் இபி காலனி பகுதியில் சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார். இதனையடுத்து வெகுண்டெழுந்த இப்பகுதி பொதுமக்கள் மற்றும் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஒன்றிணைந்து அவ்வழியாக சென்ற பேருந்தை குறுக்கே நிறுத்தி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். திடீரென நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.
பேட்டி : சதீஷ்
FILENAME : TVR ROAD ISSUE NEWS. 08.12.2025