நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள், புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவரை ஒருமையில் பேசியதற்கும், தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்கும், மிரட்டும் தொனியில் நடந்துகொண்டதற்கும் தமிழ்நாடு சமூக நீதி பத்திரிகையாளர் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
முக்கிய அம்சங்கள்:
ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீதான தாக்குதல்:
ஊடகவியலாளர்கள் என்பவர்கள் மக்கள் சார்பாக அரசியல் தலைவர்களிடம் கேள்விகளை முன்வைக்கும் பொறுப்பில் உள்ளவர்கள். கேள்வி பிடிக்கவில்லை என்பதற்காக, அவர்களைப் பொதுவெளியில் ஒருமையில் திட்டுவதும், அச்சுறுத்துவதும் ஊடக சுதந்திரத்திற்கும், ஜனநாயக விழுமியங்களுக்கும் முற்றிலும் எதிரானது.
மைக்கையும் கேமராவையும் எடுத்துட்டு வந்துட்டா நீ என்ன பெரிய வெங்காயமா?" என்று சீமான் பேசியது, கடமை ஆற்றும் பத்திரிகையாளர்களின் உழைப்பை இழிவுபடுத்தும் செயலாகும்.
ஒரு பெரிய அரசியல் கட்சியின் தலைவரான திரு. சீமான் அவர்கள், பொதுவெளியில் பொறுமையுடனும், நாகரிகத்துடனும் நடந்துகொள்வது அவசியம். ஆத்திரத்துடன் செயல்படுவது, கட்சியின் தொண்டர்கள் மத்தியில் வன்முறை சார்ந்த தவறான முன்னுதாரணத்தை உருவாக்கும்.
தொடர்ந்து தனது நிர்வாகிகள் மூலம் செய்தியாளர்களை மிரட்டியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன.
ஊடகத்தின் மாண்பினைக் காக்கும் பொருட்டு, திரு. சீமான் அவர்கள் இந்தச் சம்பவத்திற்காகப் பாதிக்கப்பட்ட செய்தியாளரிடமும், ஒட்டுமொத்தப் பத்திரிகையாளர் சமூகத்திடமும் உடனடியாகப் பொது மன்னிப்புக் கோர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இனிவரும் காலங்களில், நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஊடகவியலாளர்களிடம் மரியாதையுடன் நடந்துகொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
