100 ஆண்டுகள் பழமையான வட்டாட்சியர் அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

 



திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், வேளாண் விரிவாக்க மையம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், புள்ளியியல் அலுவலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வந்தது. இதில் 100 ஆண்டுகள் பழமையான கட்டடத்தின் ஒரு பகுதியில் வட்டாட்சியர் அலுவலகமும், மற்றொரு பகுதியில் காவல் நிலையமும் செயல்பட்டு வந்தது. இருப்பினும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு என புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் வட்டாட்சியர் அலுவலகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடம் பெயர்ந்தது. அதேபோல் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்ட நிலையில் அந்த அலுவலகமும் புதிய கட்டிடத்திற்கு இடம் மாற்றம் பெயர்ந்தது. கடந்த 1914- ஆம் ஆண்டு கட்டப்பட்டு 110 ஆண்டுகளை கடந்த பழமையான கட்டடத்தில் வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்ட பகுதியினை மட்டும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணித்துறையின் மூலம் புனரமைக்கப்பட்ட சில மாதங்களிலேயே வட்டாட்சியர் அலுவலகம் புதிய கட்டிடத்திற்கு இடம் பெயர்ந்தது. 100 ஆண்டுகளை கடந்த பழமையான கட்டிடம் அலுவலக பயன்பாட்டில் கடந்த சில ஆண்டுகளாக இல்லை. தற்போது சிதிலமடைந்து வருகிறது. பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக இக்கட்டிடம் உள்ளது. இக்கட்டிடத்தை இருப்பிடமாக கொண்டுள்ள பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வப்போது அருகிலுள்ள வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் காவல் நிலையத்திற்கு படையெடுப்பது தொடர்கதையாகவே உள்ளது. மேலும் கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்களில் அரச மரக்கன்றுகள் முளைத்து தற்போது பெரிய மரமாகவே காட்சியளிக்கிறது. இம்மரங்களின் வளர்ச்சி வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் பழமையான கட்டடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வலங்கைமான் பகுதியில் 110 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக காட்சியளிக்கும் இக்கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைக்க வேண்டும். வலங்கைமானுக்கு பழமையான அடையாளங்களில் ஒன்றாகும். இக்கட்டிடத்தைப் புனரமைத்த பிறகு பழுதடைந்த கட்டிடத்தில் போதிய இட வசதி இன்றி பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தினை இக்கட்டிடத்தில் செயல்படும் விதமாக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இக்கட்டிடத்தின் பழமை தன்மையை உணர்ந்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக புனரமைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.


Previous Post Next Post