தமிழக முழுவதும் தற்போது கோடை விடுமுறை காலம் நடைபெற்ற வருவதால் பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இன்று மாலை திருவாரூர் நகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக திருவாரூரின் மையப்பகுதியான தெற்கு வீதி பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் சாலையான பனகல் சாலை, கீழ வீதி, தெற்கு வீதி, அங்காளம்மன் கோவில் சன்னதி தெரு ஆகிய நான்கு முனை சந்திப்பில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் நீடித்தது. குறிப்பாக மாலை 6 மணி முதல் 7.30மணி வரை இந்த 4 முனை சந்திப்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகியும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்வதற்கு போக்குவரத்துக் காவலரோ அல்லது காவல்துறை சார்பில் ஒருவருமே சம்பவ இடத்திற்கு வரவில்லை.
இதனையடுத்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்த ஆட்டோ ஓட்டுனரான இளைஞர் ஒருவர் தனது ஆட்டோவை ஓரமாக நிறுத்திவிட்டு போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார். அவரது தீவிர முயற்சியால் அரை மணி நேரத்திற்குள் அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது. அதன் பிறகே அந்த பகுதியில் காவல்துறையினர் வந்து சேர்ந்தனர். போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நான்கு முனை சந்திப்பில் இருந்து 500 மீட்டர் தூரத்தில் தான் திருவாரூர் நகர காவல் நிலையம் அமைந்துள்ளது. ஆனால் ஒரு மணி நேரமாகியும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய காவல்துறையினர் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவல்துறையினர் இல்லாத நிலையில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போக்குவரத்து நெரிசலை, தனி ஒரு ஆளாக நின்று சீர் செய்த இளைஞருக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.