தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதலே பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருத்துறைப்பூண்டி, கண்கொடுத்தவணிதம், கமலாபுரம், விடயபுரம், கச்சனம், ஆலத்தம்பாடி, திருநெய்ப்பேர், மாங்குடி, மாவூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதன் காரணமாக திருநெய்ப்பேர் பேருந்து நிலையம் அருகே, வீட்டுக்குள் இருந்த வாகை மரம் ஒன்று பலத்த காற்றின் காரணமாக வேரோடு சாய்ந்தது. வீட்டின் காம்பௌண்ட் சுவரை இடித்துக் கொண்டு திருவாரூர் - திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் மரம் வேரோடு சாய்ந்தது.
சாலையின் குறுக்கே மரம் விழுந்ததின் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து மின்சாரமும் துண்டிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து திருநெய்ப்பேர் பகுதி இளைஞர்கள் ஒன்றிணைந்து சாலையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்த முயற்சி மேற்கொண்டனர். ஆனால் மரத்தின் கனம் அதிகமாக இருந்த காரணத்தினால் மரத்தை அப்புறப்படுத்துவது சவாலான பணியாக மாறியது.
தொடர்ந்து மரம் அறுக்கும் இயந்திரத்தின் மூலம் இளைஞர்கள் ஒன்றிணைந்து மரத்தை அறுத்து துண்டு துண்டாக வெட்டி அப்புறப்படுத்தி போக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலையை சீரமைத்தனர்.
இதனை தொடர்ந்து இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு வாகனங்கள் அங்கிருந்து நகர்ந்து சென்றன. மழையின் காரணமாக வேரோடு சாய்ந்த மரத்தை அதிகாரிகள் வந்து அப்புறப்படுத்தும் வரை காத்திருக்காமல், சமயோசிதமாக செயல்பட்டு மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய இளைஞர்களை அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெகுவாக பாராட்டினர்