ராணிப்பேட்டை, நவம்பர் 2:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்துக்குட்பட்ட இசையனூர் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.79 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய அலுவலகத்தை, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராணிப்பேட்டை அருகே அம்மூரில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் காணொளி காட்சி (வீடியோ கான்பரன்ஸ்) வழியாக நேற்று திறந்து வைத்தார்.
நிகழ்விடத்தில், ஊராட்சி மன்ற தலைவர்
ஜெ. பானுமதி ஜெகநாதன் ரிப்பன் வெட்டி அலுவலகத்தை பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ரேணுகா வேணுகோபால், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மணி, மஞ்சுளா, கோபி, சுந்தர், ரேகா, துக்காராமன், பாலாஜி, ஊராட்சி செயலாளர் கிருபானந்தன் உள்ளிட்டோர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.