சேலம் மாவட்டம், மேச்சேரி பேரூராட்சியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு பத்ரகாளி அம்மன் திருக்கோயிலுக்குச் சொந்தமான, ரூ. 4 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட விருந்து மண்டபம் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாமல் கிடப்பதால், அப்பகுதி சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியுள்ளது. இதனால் கோயில் வளாகத்தின் புனிதம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
திருவிழாக்கள் மற்றும் சுப நிகழ்வுகளுக்குப் பயன்படும் நோக்கில் பக்தர்களின் வசதிக்காகப் பிரம்மாண்டமாகக் கட்டி முடிக்கப்பட்ட இந்த விருந்து மண்டபம், கட்டி முடிக்கப்பட்டு நீண்ட நாட்களாகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் மண்டபத்தைப் பயன்படுத்த முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இரவு நேரத்தில் முறைகேடுகள்:
பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படாத இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட மதுப் பிரியர்கள், இரவு நேரங்களில் இந்த மண்டபத்தைப் மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர். மேலும், திருநங்கைகள் சிலர் இரவு நேரத்தில் இந்த மண்டபத்தில் சட்டவிரோத மற்றும் தவறான செயல்களில் ஈடுபடுவதாகவும், இதனால் கோயில் வளாகத்தின் புனிதம் பாதிக்கப்படுவதாகவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.
கோவில் செயல் அலுவலர் சுதா EO
அதிகாரிகள் அலட்சியம்:
இது தொடர்பாக, அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் சுதா அவர்களிடம் பலமுறை பொதுமக்கள் நேரில் புகார் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனையுடன் கூறுகின்றனர். அதிகாரிகளின் அலட்சியமே இந்தப் புதிய கட்டடம் சமூக விரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தப்படக் காரணம் எனவும் குற்றம் சாட்டுகின்றனர்.
மண்டபம் சேதமடையும் அபாயம்:
சரியான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு இல்லாத காரணத்தால், திறந்து வைக்கப்படாத இந்தக் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள விருந்து மண்டபம் விரைவில் சேதமடைந்துவிடும் என்றும், உள்ளே உள்ள விலையுயர்ந்த பொருட்கள் மற்றும் தளவாடங்கள் வீணாகிப் போகும் அபாயம் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை:
உடனடியாக மண்டபத்தைத் திறந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என்றும், இரவு நேரங்களில் முறைகேடான செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் செயல் அலுவலர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு மேச்சேரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயிலுக்குச் சொந்தமான ஒரு பிரம்மாண்ட கட்டடம் இவ்வாறு சீரழிந்து வருவதை அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கவனித்து, உடனடியாகத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து, பத்ரகாளி அம்மன் திருக்கோயில் வளாகத்தின் புனிதம் காக்கப்படுமா? என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.