திருச்சி மாவட்டம்மணப்பாறையில் மகப்பேறு மருத்துவமனை: திறப்பு விழாவோடு நின்றதா? மக்கள் காத்திருப்பு நீடிப்பு



 முதல்வர் திறந்து வைத்த மணப்பாறை அரசு  மகப்பேறு மருத்துவமனை, பல மாதங்களாகியும் செயல்பாட்டிற்கு வராததால் பொதுமக்கள் அதிருப்தி.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களால் கடந்த மே மாதம் பிரம்மாண்டமாக திறந்து வைக்கப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனை, இன்று வரை மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மணப்பாறை மக்கள் நீண்ட காலமாகவே மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளுக்காகப் போராடி வந்துள்ளனர். 

குளித்தலை தாலுகாவில் இருந்து பிரிந்து புதிய தாலுகாவாக மணப்பாறை உருவான நிலையில், மக்களின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டு "லோக்கல் ஃபண்டு ஆஸ்பத்திரி" என்று அழைக்கப்பட்ட இந்த மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தக் கோரி சுமார் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

2001 ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் மாவட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்ட போதிலும், 2006 ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில், அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, பின்னர் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் திறக்கப்பட்டாலும், இன்றளவும் மணப்பாறை அரசு மருத்துவமனை முழுமையான மாவட்ட தலைமை மருத்துவமனைக்குரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை என்றே பொதுமக்கள் கருதுகின்றனர்.

இங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி இல்லை. மேலும், சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிசோதனை அறிக்கை அடுத்த நாள்தான் கிடைக்கிறது. பல சிகிச்சைகளுக்கு இங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் அனுப்பப்படும் அவலநிலை தொடர்கிறது. இந்நிலையில், கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பதைத் தடுக்கும் நோக்கில், உயர் சிறப்பு சிகிச்சையாகக் கருதப்படும் மகப்பேறு சிகிச்சையை வழங்கும் வகையில் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட மகப்பேறு மருத்துவமனை கடந்த மே மாதம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. 

ஆனால், திறக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை மகப்பேறு சிகிச்சை தொடங்கப்படவில்லை. இதனால், பிரசவத்துக்காக 40 கி.மீ. தொலைவில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனைக்குச் செல்ல வேண்டிய நிலை தொடர்வதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
"அரசு திட்டங்கள் மக்களைச் சென்றடைவதில் உள்ள இடர்ப்பாடுகள் எங்கே ஏற்படுகின்றன என்பதைக் கண்டறிந்து, மக்கள் பயன் பெறும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மக்கள் பயன்படுத்தும் பகுதியிலுள்ள இந்த மருத்துவமனையை உடன் செயல்படக் கொண்டுவர வேண்டும்," என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகரமன்ற உறுப்பினர் பகுதியிலுள்ள இந்த மருத்துவமனையை உடன் செயல்பாட்டிற்க்கு கொண்டுவர வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டப் பொருளாளர் ஜனசக்தி உசேன் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதல்வர் உயர் நோக்குடன் திறந்து வைத்த மகப்பேறு மருத்துவமனை விரைவில் செயல்பாட்டுக்கு வந்து மக்கள் பயன் பெறுவர் என்ற நம்பிக்கையுடன் மணப்பாறை மக்கள் காத்திருக்கின்றனர். அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.
Previous Post Next Post