உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்: தலைவர்களின் பொறுப்பின்மை, பொதுமக்கள் மனவருத்தம்!

உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்: தலைவர்களின் பொறுப்பின்மை, பொதுமக்கள் மனவருத்தம்!

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம்  கர்ணாவூர் மற்றும் புதுப்பட்டு ஊராட்சிகளுக்கு என ஏற்பாடு செய்யப்பட்ட "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம், ஊராட்சி மன்றத் தலைவர்களின் பொறுப்பின்மையாலும்,  ஊராட்சி செயலாளரின்  அதிகப்படியான தலையீட்டாலும், பொதுமக்கள் முழுமையாகப் பயன்பெறாமல் மனவருத்தத்துடன் திரும்பிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.

புதுப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி ஜீவா மற்றும் கரணாவூர் ஊராட்சி மன்றத் தலைவர் கே. சுந்தரம் ஆகியோர், முகாமின் ஆரம்பத்தில் பெயரளவில் கலந்துகொண்டதோடு, அதன் பிறகு முகாமை விட்டு விலகியதாகத் தெரிகிறது. முகாம் முடியும் வரை அவர்கள் மீண்டும் வரவில்லை என்றும், பொறுப்பற்றுச் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முகாமின்போது, கரணாவூர் ஊராட்சி செயலாளர் சீனிவாசன், துறை சார்ந்த அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்யும்போது தொடர்ந்து குறுக்கிட்டு, இடைஞ்சல் ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. முகாம் ஏற்பாடுகள் என்ற பெயரில் அவர் ஏற்படுத்திய இடையூறுகள், அதிகாரிகளின் பணியைச் சிரமமாக்கியது.

இந்தச் சூழலால், கடைசி நாளான இன்று முகாம் பணிகள் வேக, வேகமாக துரிதப்படுத்தப்பட்டு, மதிய உணவுக்குப் பிறகு இரண்டரை மணிக்குள் அவசர அவசரமாக முடிக்கப்பட்டது. பொதுமக்கள் பல்வேறு திட்டங்களின் பயன்களைப் பெறுவதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தபோதும், முகாம் விரைவாக முடிக்கப்பட்டதால், தங்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் பலர் ஏமாற்றத்துடன் திரும்பினர். அரசின் சேவையைப் பெறுவதற்காக வந்த பொதுமக்கள், முறையாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாமல் மன உளைச்சலுடன் திரும்பிச் சென்றது, முகாமின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறுப்புடன் செயல்படாததும், ஊராட்சிச் செயலாளரின் அதிகப்படியான தலையீடும், பொதுமக்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவதற்கு தடையாக அமைந்துவிட்டதாகச் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post