இடம்:மாங்குடி - முத்துப்பேட்டை
தமிழக காவிரி விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் பி ஆர் பாண்டியன் இன்று திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஒன்றியம் மாங்குடி,
எடையூர்,
பாண்டிக்கோட்டகம்,
கீழப்பெருமளை,
கரையன்காடு, தொண்டியக்காடு உள்ளிட்ட கிராமங்களில் ஓடக்கூடிய பழம்பாண்டியாறு, புது பாண்டியாறு, சாலுவனாறு, வளவனார், தூக்கனாம்குருவி உள்ளிட்ட பாசன,வடிகால் ஆறுகளையும்,கிளை வடிகால்களையும்
நேரில் பார்வையிட்ட பின்னர் முத்துப்பேட்டை மாங்குடியில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
காவிரி டெல்டா மாவட்டங்களில் மிகப் பெரும் வடிகால் பகுதியாக திகழ்வது முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, கோட்டூர் ஒன்றிய பகுதிகளாகும். இப்பகுதிகளில் வழியாக ஓடக்கூடிய பழம்பாண்டியாறு புதுபாண்டியாறு, வளவனாறு உள்ளிட்ட நதிகள் வழியாக திருவாரூர் மாவட்டத்தின் பெரும்பகுதி கிராமங்களின் வெள்ள நீர் கடலில் சென்று வடிகிறது.
இப்பகுதிகளில் உள்ள பாசன வடிகால் ஆறுகளிலும், வடிகால்களிலும் வெங்காயத்தாமரை செடிகள் அடர்ந்து வளர்ந்து வனம் போல காட்சியளிக்கிறது இதனால் பாசன தட்டுப்பாட்டு ஏற்படுவதோடு, பெரும் மழை வெள்ள காலங்களில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒட்டுமொத்த விளைநிலங்களும், குடியிருப்புகளும் அழியும் பேராபத்து ஏற்பட்டது. இதனை அகற்றக்கோரி கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தோம்.
இதனை அறிந்த தமிழக அரசு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மூலமாக கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியது.அதில் எடுக்கப்பட்ட முடிவு அடிப்படையில் தமிழக அரசுக்கு எழுத்துப்பூர்வமான முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. அதனையடுத்து தமிழக அரசு நீர்ப்பாசன துறை மூலமாக காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூபாய் 18 கோடி நிதி ஒதுக்கீடு செய்து வெங்கயத்தாமரை அகற்றுவதற்கு அரசானை வெளியிட்டுள்ளதை வரவேற்கிறோம். தமிழக காவிரி டெல்டா விவசாயிகளின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
தொடர்ந்து இப்பணிகள் அரசியல் தலையீடுகள் இன்றி வெளிப்படுத்தன்மையோடு வெங்காயத்தாமரைகளை அகற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும்.அக்குழு பணிகளை விரைந்து செயல்படுத்தி வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்னதாக பாசன வடிகால்களை சீரமைத்திட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றார்.
மாநில துணைச் செயலாளர்
எம் செந்தில்குமார், திருவாரூர் மாவட்ட செயலாளர் குடவாசல் சரவணன், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் மாங்குடி சரவணன்,
தலைவர் வெற்றி, நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு செயலாளர் கருணைநாதன், வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் தாணிகோட்டகம் ரவி, பசீர் அகம்மது, உள்ளிட்ட நிர்வாகிகள் விவசாயிகள் உடன் இருந்தனர்.