மன்னார்குடியில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில் திருவாடுதுறை ஆதீனம் 24-வது குரு மகா சன்னிதானம் பங்கேற்று கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி 6ஆம் நம்பர் வாய்க்கால் அருகே காமாட்சியம்மன் உடனுரை அகத்தீஸ்வரர் கோவில் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டது இதனையடுத்து கடந்த 25 ஆம் தேதி முதல் யாகசாலை அமைத்து மூன்று நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை நடைபெற்ற நான்காம் கால பூஜையில் திருக்கைலாய பரம்பரை மெய்கண்டசந்தானம் திருவாடுதுறை ஆதீனம் 24 -வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் பங்கேற்றார். நாடீ சந்தானம், தத்துவார்ச்சனை, பூரணாஹூதி நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்த கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கோவிலை சுற்றி வளம் வந்து கோபுர கலசங்களில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். தொடர்ந்து அகத்தீஸ்வரர், காமாட்சியம்மன், வனக்காளி , விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் மன்னார்குடி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்ற சுவாமி தரிசனம் செய்தனர்.