மதத்திற்கு அப்பாற்பட்டு அனைத்து மதத்தினரும் பங்கேற்ற திருநெல்லிக்காவல் புனித அந்தோணியார் ஆலய தேர்திருவிழா…
மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக அனைத்து மதத்தினரும் பங்குகொண்ட திருவாரூர் மாவட்டம், மன்னாா்குடி அருகே திருநெல்லிகாவல் அடுத்துள்ள இலுப்பூர் பகுதியில் அமைந்துள்ள புனித அந்தோணியார் ஆலயத்தின் வருடாந்திர தேர்திருவிழா வானவேடிக்கையுடன் விமர்சையாக நடைபெற்றது. புனித அந்தோணியார் ஆலயம் மிகவும் பழமையும் தொன்மை சிறப்புமிக்க ஆலயம். இவ்வாலயத்தின் வருடாந்திர தேர்திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவினையொட்டி கடந்த 10 தினங்களாக தினசரி இவ்வாலயத்தில் சிறுதேர்பவணி, ஜெபமாலை, பிராத்தனை ஆகியவை நடைபெற்றன. இதன் சிறப்பு நிகழ்ச்சியாக தேர்பவணி இன்று நடைபெற்றது. தேர்பவணியையொட்டி ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு ஜெபகூட்டு வழிபாட்டில் திரளாக கலந்துகொண்டோர் நாட்டில் மழைவளம் சிறக்க வேண்டியும், விவசாயம் செழித்தோங்க வேண்டியும், மக்கள் அனைவரும் ஆரோக்கியத்துடன் செல்வசெழிப்புடன் வாழவேண்டியும் புனித அந்தோணியாரிடம் பிராத்தனை நடத்தினர். இதனை தொடர்ந்து பேராலயம் முன்பு மின்னொலியில் அலங்கரிக்கப்பட்ட தேர் சப்பரங்களில் புனித அந்தோணியார் சொருபம், அன்னைமாதா சொருபம் முதலான சொருபங்கள் எழுந்தருள, பிரதான முக்கிய சாலைகளில் தேர் சப்பரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வலம்வந்தன. அப்போது வழிநடுகிலும் இருந்த பக்தர்கள் மதத்திற்கு அப்பாற்பட்டு மாதாவின் சொருபங்களுக்கு மாலை அணிவித்து பிராத்தனை செய்தனர். தேர்திருவிழாவின்போது கண் கவரும் வானவேடிக்கையும் நடைபெற்றது. வானதூதர் அனைவரையும் வரவேற்று மாலை அணிவித்த காட்சி அனைத்து தரப்பு மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .