முதலமைச்சரின் கள ஆய்வு வருகைக்காக தேனி மாவட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆய்வு.!!
மார்ச்:5
ஆவணம்:1
தேனி மாவட்ட செய்தியாளர்: இரா.இராஜா
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடு குறித்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மறுநாள் மதுரையில் கள ஆய்வு மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக தற்போது தேனி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோர் ஆய்வு செய்து வருகின்றனர். முதலாவதாக போடிநாயக்கனூரில் செயல்படுத்தப்படும் கொட்டக்குடி குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர்.
இதையடுத்து தேவாரம் பேரூராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள் திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். தொடர்ந்து கம்பம் நகராட்சி பகுதியில் உள்ள மார்க்கெட், கடமலைக்குண்டு ஊராட்சியில் கூட்டுக்குடிநீர் திட்டம், தென்கரை பேரூராட்சிகளுக்கான குடிநீர் திட்டப் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்த ஆய்வு செய்யும் அமைச்சர்கள் குழுவினர் இதன் ஆய்வறிக்கையை நாளை மறுநாள் மார்ச் 6ஆம் தேதியன்று மதுரையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.
இந்த ஆய்வின் போது தேனி மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா, திமுக எம்.எல்.ஏக்கள் ஆண்டிபட்டி - மகாராஜன்,, கம்பம் - ராமகிருஷ்ணன் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள், அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.