ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில், ஜாக்டோ–ஜியோ ஆசிரியர் அமைப்பின் சார்பில், 2026 ஜனவரி 6 அன்று நடைபெறவுள்ள பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்திய காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான ஆயத்த மாநாடு இன்று கலவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு மாவட்ட செயலாளரும், மாநில தலைமை நிலச் செயலாளருமான பி. பாலமுருகன் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கார்த்திகேயன், நரசிம்மன், எழில், இளம்வழுதி, சிவராஜ், பர்சில்லா வான சாஸ்திரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டிற்கு சிறப்பு அழைப்பாளராக, ஜாக்டோ–ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் நிறுவனத் தலைவருமான சி. சேகர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
கருத்துரை அமர்வில் மாநில மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்களான விநாயகம், ஆதவன், தேவராஜ், சரவணன், யோச்சுவா, கமலஹாசன், பிரகாசம், காமராசன், கீதா, ஜெயந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த ஆயத்த மாநாட்டில் 100-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொண்டு, வரவுள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது குறித்த தீர்மானங்களை எடுத்தனர்.